< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

பெங்களூருவில் கேக் கண்காட்சி கோலாகலம்

தினத்தந்தி
|
18 Dec 2022 12:15 AM IST

பெங்களூருவில் கேக் கண்காட்சி கோலாகலமாக நடந்து வருகிறது. இது அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி வரை நடக்கிறது. இங்கு கண்ணை கவரும் வகையில் ‘கேக்’குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் கேக் கண்காட்சி கோலாகலமாக நடந்து வருகிறது. இது அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி வரை நடக்கிறது. இங்கு கண்ணை கவரும் வகையில் 'கேக்'குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேக் கண்காட்சி

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்ைடயொட்டி பெங்களூரு கன்டீரவா மைதானத்துக்கு எதிரே உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் கடந்த 15-ந்தேதி கேக் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சி அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி வரை நடக்க உள்ளது. இதையொட்டி அங்கு கடந்த சில மாதங்களாக பல்வேறு வடிவங்களில் கேக் தயாாிக்கும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் அந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, அந்த கேக்குகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கதீட்ரல் தேவாலயம்

இந்த கண்காட்சியில் வடஅமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தேவாலயமான 'கதீட்ரல்' கட்டிடத்தின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் கிலோவில் இந்த கதீட்ரல் தேவாலயத்தின் மாதிரி கேக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை 16 பேர் சேர்ந்து சுமார் 3½ மாதங்கள் உருவாக்கி உள்ளனர். பிரமாண்டமாக உள்ள இந்த கேக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும், மைசூரு தசரா விழாவில் கலந்துகொண்டு சமீபத்தில் உயிரிழந்த கோபாலசாமி யானையின் மாதிரி கேக் 400 கிலோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை 25 நாளில் 6 பேர் வடிவமைத்துள்ளனர். இதைத்தவிர எலெக்ட்ரானிக் கார்களை வாங்க ஊக்குவிக்கும் வகையில் எலெக்ட்ரிக் கார்கள் மாதிரி கேக் 120 கிலோவில் 3 பேர் 20 நாளில் வடிவமைத்துள்ளனர்.

பார்வையாளர்கள் பிரம்மிப்பு

மேலும் நாட்டின் தேசிய சின்னமான அசோகா தூண் (430 கிலோ), இந்து கடவுளான விஷ்ணு (465 கிலோ), 320 கிேலாவில் நீராவி என்ஜின், 380 கிலோவில் ஈபிள் டவர், 12 கிலோவில் பரதநாட்டியம், 110 கிலோவில் கிறிஸ்துமஸ் மரம், 110 கிலோவில் பாம்பு மற்றும் கழுகு உள்ளிட்ட 27 வகையான வடிவங்களில் கண்ணை கவரும் வகையில் கேக்கால் உருவாக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை கவரும் வகையில் நுண்ணிய வேலைபாடுகள் மூலம் கேக்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேக் கண்காட்சியை காண ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள். அவர்கள் கேக்கால் வடிவமைக்கப்பட்ட ஒவ்வொரு வடிவங்களை பார்த்தும் பிரம்மிப்படைந்து வருகிறார்கள்.

நுழைவு கட்டணம்

இந்த கண்காட்சிக்கு வருபவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்