பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளி பற்றி துப்பு துலங்கியது - கர்நாடக மந்திரி
|பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக கர்நாடக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந் தேதி அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதில், பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள். குண்டுவெடிப்பு நடந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன், போலீஸ் மந்திரி பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில், குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நடக்கிறது. கர்நாடக மாநில போலீசாருடன் இணைந்து, என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை), தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
குண்டுவெடிப்பு நடந்த ஓட்டலில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்களை தொழில்நுட்ப முறைப்படி ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட மர்மநபர் குறித்த முக்கிய ஆதாரம், தகவல்கள் போலீசாருக்கு சிக்கி உள்ளது. துப்பு துலங்கி உள்ள நிலையில் கூடிய விரைவில் குண்டுவெடிப்பு நிகழ்த்திய குற்றவாளி கைது செய்யப்படுவது உறுதி.
ராமேஸ்வரம் கபே ஓட்டலுக்கு 12 கிளைகள் இருப்பதாகவும், அந்த ஓட்டலின் வளர்ச்சி பிடிக்காத காரணத்தால் தான் திட்டமிட்டு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு இருப்பதாகவும், அப்பகுதி மக்கள் பேசுவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதன் காரணமாக குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதா?, அல்லது வேகமாக வளர்ந்து வரும் பெங்களூருவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன் வருவதால், குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதா? உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் எந்த தடைகள் வந்தாலும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம். மங்களூருவில் நடைபெற்றிருந்த குக்கர் குண்டுவெடிப்புக்கும், பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்புக்கும் சில தொடர்புகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதற்காக குக்கர் குண்டுவெடிப்பு குற்றவாளிகளே இந்த குண்டுவெடிப்பை நடத்தினார்கள் என்பது அர்த்தம் இல்லை.
2 சம்பவங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மங்களூருவில் குக்கர் குண்டுவெடிப்பில் சிக்கிய டெட்டனேட்டர்கள், நட்டு, போல்டு, பேட்டரி ஆகியவையும், பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பில் கைப்பற்றப்பட்ட சிதறல்களும் ஒரே மாதிரியாக இருப்பதால், அதுபற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறினார்.