இளைஞர் மேம்பாட்டுக்கு புதிய தன்னாட்சி அமைப்பு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
|இளைஞர் மேம்பாட்டுக்கு ‘மை பாரத்’ என்ற புதிய தன்னாட்சி பெற்ற அமைப்பை உருவாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது.
அதில், 'மேரா யுவ பாரத்' (மை பாரத்) என்ற அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
'மேரா யுவ பாரத்' (மை பாரத்) என்ற தன்னாட்சி அமைப்பை உருவாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இளைஞர் மேம்பாடு மற்றும் இளைஞர்கள் தலைமையிலான மேம்பாட்டுக்காக இந்த அமைப்பு, தொழில்நுட்பம் அடிப்படையிலான உச்சபட்ச அமைப்பாக செயல்படும்.
வளர்ந்த இந்தியா
இந்த அமைப்பு, தங்கள் விருப்பங்களை செயல்படுத்தவும், வளர்ந்த இந்தியாவை உருவாக்கவும் அனைத்து இளைஞர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கும்.
ஒட்டுமொத்த அரசு தளத்தையும் இளைஞர் மேம்பாட்டுக்கு தயார்படுத்துவதுதான் இதன் முக்கிய நோக்கம். அரசு திட்டங்களுடன் இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொள்ள இது உதவும்.
15 வயது முதல் 29 வயது வரை கொண்ட இளைஞர்கள், இந்த அமைப்பின் மூலம் பலன் அடையலாம். அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே அவர்கள் பாலமாக இருப்பார்கள். தேச கட்டுமானத்தில் அவர்களது ஆற்றல் பயன்படுத்திக்கொள்ளப்படும்.
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி, அக்டோபர் 31-ந் தேதி, 'மை பாரத்' நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று அவர் கூறினார்.
காப்புரிமை
3 முக்கிய கனிமங்களுக்கான காப்புரிமை தொகை குறித்தும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
லித்தியம், நியோபியம் ஆகிய கனிமங்களுக்கான காப்புரிமை விகிதம் தலா 3 சதவீதம் என்றும், அரிய புவி கனிமங்களின் காப்புரிமை விகிதம் 1 சதவீதம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதன்மூலம் இந்த கனிமங்களின் சுரங்கங்களை முதல் முறையாக ஏலம் விட மத்திய அரசுக்கு வழி பிறந்துள்ளது.