மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் என பாராட்டு தெரிவித்து பின் பதிவை நீக்கிய மத்திய மந்திரி
|மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்ததாக பாராட்டு தெரிவித்து பின்னர் தனது பதிவை மத்திய மந்திரி நீக்கினார்.
புதுடெல்லி,
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று தொடங்கிய சிறப்புக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து விவாதிக்கப்பட்டது. நாளை முதல் புதிய கட்டிடத்தில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டங்களில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக நிலுவையில் இருந்த நிலையில் இந்த மசோதாவுக்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளநிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், "மகளிர் இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் தார்மீக தைரியம் மோடி அரசுக்கு மட்டுமே இருந்தது. இது அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் மற்றும் பிரதமர் மோடி அரசுக்கு வாழ்த்துக்கள்" என்று அதில் மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்த தனது பதிவை திடீரென மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் நீக்கியுள்ளார்.