'குடியுரிமை திருத்தச் சட்டம் என்.ஆர்.சி.யுடன் தொடர்புடையது; அதனால் அதை எதிர்க்கிறோம்' - மம்தா பானர்ஜி
|சி.ஏ.ஏ. என்பது மக்களவை தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க. நடத்தும் அரசியல் நாடகம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா,
கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (சி.ஏ.ஏ.) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இருப்பினும் அந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு முன்பாக சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
இந்த நிலையில், சி.ஏ.ஏ.வை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்துடன் இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.
இதனிடையே இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக பல்வேறு எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சி.ஏ.ஏ. என்பது பா.ஜ.க.வின் அரசியல் நாடகம் என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;-
"குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் (என்.ஆர்.சி.) தொடர்புடையது. அதனால்தான் நாங்கள் அதை எதிர்க்கிறோம். அசாமில் உள்ளதுபோல் மேற்கு வங்கத்திலும் தடுப்பு முகாம்களை அமைக்க நாங்கள் விரும்பவில்லை. சி.ஏ.ஏ. என்பது மக்களவை தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க. நடத்தும் அரசியல் நாடகம்."
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.