குடியுரிமை திருத்த சட்டம் அமல்: "பா.ஜனதாவின் மோசமான வாக்கு வங்கி அரசியல்.." - கெஜ்ரிவால் கடும் தாக்கு
|மத்திய பா.ஜனதா அரசு தனது பணிகளை செய்திருந்தால், ஓட்டுக்காக இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய தேவை வந்திருக்காது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
புதுடெல்லி,
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியது தொடர்பாக மத்திய பா.ஜனதா அரசை டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து பெருமளவிலான ஏழை சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வருவதற்கான கதவுகளை மத்திய அரசு திறந்து விட்டிருக்கிறது. இந்த சட்டம் அமல்படுத்தியதை தொடர்ந்து 1.5 கோடிக்கு அதிகமான சிறுபான்மையினர் அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வந்திருக்கிறார்கள். ஒரு அபாயகரமான சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இது 1947-ம் ஆண்டை விட மிகப்பெரிய புலம்பெயர்தலாக இருக்கும். சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் நிலை உருவாகி இருக்கிறது. கற்பழிப்பு, கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கலாம். பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து குடியேறிய ஏழைகளுக்கு இங்கு வீடு மற்றும் வேலை கொடுத்து குடியமர்த்த நமது மக்களின் பணத்தை செலவிட பா.ஜனதா விரும்புகிறது.
அண்டை நாடுகளில் வசிக்கும் ஏழை சிறுபான்மையினர் இந்தியாவில் குடியேறி அதன் வாக்கு வங்கியாக மாறுவதால், வரும் தேர்தலில் பா.ஜனதாவுக்கு லாபம் கிடைக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது பா.ஜனதாவின் மோசமான வாக்கு வங்கி அரசியல் ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு தனது பணிகளை செய்திருந்தால், ஓட்டுக்காக இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய தேவை வந்திருக்காது.
ஒருபுறம் உள்நாட்டில் வேலையில்லாத இளைஞர்களின் படையே இருக்கிறது, அரியானா பா.ஜனதா அரசு போர் முனையாக இருக்கும் இஸ்ரேலுக்கு இளைஞர்களை அனுப்பி சாகடிக்கிறது. மறுபுறம் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களது பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.
நமது குழந்தைகளின் வேலை உரிமையை பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்கு வழங்குவது என்ன மாதிரியான முட்டாள்தனம்? கடந்த 10 ஆண்டுளில் 11 லட்சம் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.