< Back
தேசிய செய்திகள்
மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு சி.ஏ.ஏ. மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது - ஜகதீப் தன்கர்
தேசிய செய்திகள்

'மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு சி.ஏ.ஏ. மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது' - ஜகதீப் தன்கர்

தினத்தந்தி
|
29 March 2024 2:51 AM GMT

சி.ஏ.ஏ. மூலம் யாருடைய உரிமையும் பறிக்கப்படுவது இல்லை என துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம்(சி.ஏ.ஏ.) மூலம் நிவாரணம் வழங்கப்படுவதாக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் நடைபெற்ற பார் அசோசியேசன் மாநாட்டில் ஜகதீப் தன்கர் கூறியதாவது;-

"சி.ஏ.ஏ. குறித்த அடிப்படைகளை அறியாமல் அதை எப்படி விமர்சிக்க முடியும்? இதில் உள்ள மனிதாபிமான அம்சத்தை நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம். நமது அண்டை நாடுகளில் மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு சி.ஏ.ஏ. மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது.

இதில் யாருடைய உரிமையும் பறிக்கப்படுவதில்லை. யாரையும் பயனடைவதற்காக நாம் அழைக்கவும் இல்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக நமது நாட்டில் இருப்பவர்களுக்குதான் இதன் மூலம் பலன் அளிக்கப்படுகிறது.

நமது தேசம் 5,000 ஆண்டுகளுக்கும் முந்தைய நாகரீகத்தை கொண்டதாகும். சில நாடுகள் ஜனநாயகம் என்றால் என்ன என்று நமக்கு பாடம் கற்பிக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்கள் மூலம் நமது நாட்டின் இளைஞர்கள் தக்க பதிலளிக்க வேண்டும்."

இவ்வாறு ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்