< Back
தேசிய செய்திகள்
ராஜ்நாத்சிங் முன்னிலையில் சி-295 ரக விமானம், விமானப்படையில் சேர்ப்பு
தேசிய செய்திகள்

ராஜ்நாத்சிங் முன்னிலையில் சி-295 ரக விமானம், விமானப்படையில் சேர்ப்பு

தினத்தந்தி
|
26 Sept 2023 5:47 AM IST

ராஜ்நாத்சிங் முன்னிலையில், முதலாவது சி-295 ரக போக்குவரத்து விமானம், இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

காசியாபாத்,

இந்திய விமானப்படை தனது போக்குவரத்து தேவைக்காக அவ்ரோ-748 ரக விமானங்களை 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது. அவை பழையதாகி விட்டதால், அவற்றுக்கு மாற்றாக ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சி-295 ரக நடுத்தர போக்குவரத்து விமானத்தை வாங்க முடிவு செய்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.21 ஆயிரத்து 935 கோடி செலவில் 56 சி-295 ரக போக்குவரத்து விமானங்களை தயாரித்து தர ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 2025-ம் ஆண்டுக்குள், 16 விமானங்களை பறக்கும்நிலையில் ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் தயாரிப்பு

மீதி விமானங்களை இந்தியாவில் டாடா அட்வான்ஸ்டு நிறுவனம் தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஐதராபாத்தில், இந்த விமானங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்த உதிரிபாகங்கள், கப்பல் மூலம் குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு விமானங்கள் உருவாக்கப்படும். இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் முதலாவது ராணுவ விமானமாக இவை இருக்கும்.

இதற்கிடையே, ஸ்பெயின் நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது சி-295 ரக போக்குவரத்து விமானம், கடந்த 13-ந்தேதி இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த விமானம், கடந்த 20-ந் தேதி, வடோதராவுக்கு வந்து சேர்ந்தது.

விமானப்படையில் சேர்ப்பு

இந்நிலையில், இந்த விமானத்தை விமானப்படையில் முறைப்படி சேர்க்கும் நிகழ்ச்சி, நேற்று உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் நடந்தது.

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். அவர் முன்னிலையில், விமானம், இந்திய விமானப்படையின் 11-வது படைப்பிரிவில் முறைப்படி சேர்க்கப்பட்டது. விமானப்படை தளபதி, விமானப்படை மற்றும் ஏர்பஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் நடந்த சர்வ தர்ம பூஜையில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.

டிரோன் கண்காட்சி

ஹிண்டன் விமானப்படை நிலையத்தில், 'பாரத் டிரோன் சக்தி-2023' என்ற கண்காட்சியை ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். இந்திய விமானப்படையும், இந்திய டிரோன் கூட்டமைப்பும் இணைந்து இதை நடத்துகின்றன. டிரோன்களின் சாகசங்களை ராஜ்நாத்சிங் பார்வையிட்டார். கண்காட்சியை சுற்றி பார்த்தார். 75 டிரோன்கள், பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

சி-295 ரக போக்குவரத்து விமானங்களில், 71 ராணுவ துருப்புகள் அல்லது 50 துணை ராணுவ துருப்புகள் வரை ஏற்றி செல்லலாம். தற்போதைய கனரக விமானங்கள் செல்ல முடியாத இடங்களுக்கும் இவை செல்லும். அங்கு துருப்புகளையும், சுமைகளையும் இறக்குவதற்கு பயன்படும். காயமடைந்த வீரர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல பயன்படும். பேரிடர் மீட்பு பணிகளிலும், கடல்சார் ரோந்து பணிகளிலும் இந்த விமானங்களை பயன்படுத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்