சூரத்கல் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்
|மங்களூரு அருகே சூரத்கல் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காங்கிரசாரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
மங்களூரு: மங்களூரு அருகே சூரத்கல் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காங்கிரசாரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
சுங்கச்சாவடி சர்ச்சை
மங்களூரு அருகே சூரத்கல்-முக்கா இடையே உள்ள சீனிவாசநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுங்சாலையில் சுங்கச்சாவடி ஒன்று உள்ளது. இந்த சுங்கசாவடியை ஒட்டி ஏற்கனவே 10 கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு சுங்கச்சாவடி உள்ளது. இரண்டு சுங்கச்சாவடியும் அருகருகே அமைந்திருப்பதாக வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சீனிவாசநகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அப்புறப்படுத்தும்படி வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த புதிய சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட அழைப்பு
இந்நிலையில் பல நாட்கள் சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்ைல. இதனால் நேற்று (18-ந் தேதி) சுங்கச்சவாடியை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் முடிவு செய்தனர். இதற்காக சமூக வலைத்தளம் மூலம் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த தகவல் அறிந்த மாவட்ட போலீசார் காங்கிரஸ் முன்னாள் பெண் கவுன்சிலர் உள்பட பலருக்கு போராட்டம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அந்த நோட்டீசிற்கு அவர்கள் தரப்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் நேற்று திட்டமிட்டப்படி காங்கிரஸ் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்தனர்.
கைது நடவடிக்கை
இதையொட்டி சுங்கச்சாவடி அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போராட்டகாரர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட முற்பட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அனைவரையும் போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தனியார் மண்டபத்தில் சிறிது நேரம் தங்கவைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.