உத்தரபிரதேச சட்டசபையின் ராம்பூர் சதர் இடைத்தேர்தலில் 34 சதவீத வாக்குப்பதிவு
|சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உத்தரபிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.
புதுடெல்லி,
சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உத்தரபிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவரது மறைவால் காலியான அந்த தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது.
இதில் 54.37 சதவீத வாக்குகள் பதிவானது. அங்கு சமாஜ்வாடி சார்பில் முலாயமின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்போல சமாஜ்வாடி மூத்த தலைவர்களில் ஒருவரான அசம்கானின் தகுதி நீக்கத்தால் காலியான ராம்பூர் சதர் சட்டசபை தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
இதில் மிகவும் குறைவாக வெறும் 34 சதவீத வாக்குகளே பதிவானது. இதில் மக்களை ஜனநாயக கடமை ஆற்ற விடாமல் தடுத்ததாக பா.ஜனதாவும், சமாஜ்வாடியும் ஒன்றையொன்று குற்றம் சாட்டியுள்ளன.
இதைத்தவிர பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மேலும் 5 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஒடிசாவின் பதம்பூரில் 76 சதவீதம், ராஜஸ்தானின் சர்தார்ஷாகரில் 70 சதவீதம், சத்தீஷ்காரின் பனுபிரதாப்பரில் 64.86 சதவீதமும் பதிவாகி உள்ளது.
உத்தரபிரதேசத்தின் கதாலியில் 56.46 சதவீதமும், பீகாரின் குரானியில் 57.9 சதவீதமும் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.