< Back
தேசிய செய்திகள்
சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரிகளில் டீசல் திருடியதாக தாக்கப்பட்ட மர்ம நபர் செத்தார்
தேசிய செய்திகள்

சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரிகளில் டீசல் திருடியதாக தாக்கப்பட்ட மர்ம நபர் செத்தார்

தினத்தந்தி
|
27 July 2023 12:15 AM IST

சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரிகளில் டீசல் திருடியதால் டிரைவர்களால் தாக்கப்பட்ட மர்மநபர் செத்தார். மற்றொரு நபர் படுகாயம் அடைந்தார்.

பெங்களூரு:-

டீசல் திருட்டு

பெங்களூருவில் நகைப்பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருக்கும் லாரிகளில் டீசல் திருடும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டீசல் திருடியவரை பிடித்து லாரி டிரைவர்கள் தாக்கியதில் அவர் பலியான சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு புறநகர்ஒசகோட்டே பகுதியில் மாலூரு சாலையில் சரக்கு லாரிகள் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான லாரிகள் நிறுத்தப்பட்டு வருகிறது. டிரைவர்கள் ஓய்வு எடுப்பதற்காக இங்கு லாரிகளை நிறுத்தி செல்கின்றனர்.

இந்த நிலையில் அந்த பகுதிக்கு நேற்று முன்தினம் 2 பேர் வந்தனர். அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் உள்ள டீசலை திருடினர். அப்போது அங்கு நின்ற டிரைவர்கள் அவரை விரட்டினர். இறுதியில் சிறிது தூரத்தில் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களை கடுமையாக டிரைவர்கள் தாக்கினர். இதில் பிடிபட்ட ஒருவர் படுகாயமடைந்து சரிந்து விழுந்தார்.

ஒருவர் சாவு

இதற்கிடையே இதுகுறித்து ஒசகோட்டே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டீசல் திருடியதாக டிரைவர்கள் தாக்கியதில் திருடவந்தவர் உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, டிரைவர்கள் தாக்கியதில் பலியானவர், காயமடைந்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்