பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் ஓடாது
|அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் அரசின் சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் அரசின் சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பஸ்களில் இலவச பயணம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பஸ்களில் பெண்கள் மாநிலம் முழுவதும் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சக்தி திட்டத்திற்கு எதிராக பெங்களூருவில் செப்டம்பர் 11-ந் தேதி (அதாவது நாளை) தனியார் பஸ்கள், வாகனங்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள், தனியார் வாகன சங்கங்களுடன் முதல்-மந்திரி சித்தராமையா, போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்க ரெட்டி ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். அப்போது சக்தி திட்டத்தின் கீழ் தனியார் பஸ்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
32 சங்கங்கள் ஆதரவு
மேலும் ஆட்டோ, வாடகை கார் டிரைவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், பெங்களூருவில் ராபிடோ வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தனியார் வாகன சங்கங்கள் முன்வைத்தன. அவற்றில் சில கோரிக்கைகளை ஏற்க போக்குவரத்து துறை மறுத்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து, 11-ந் தேதி (திங்கட்கிழமை) பெங்களூருவில் தனியார் வாகனங்கள் இயக்கப்படாது என்று தனியார் வாகன சங்கங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி, இன்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் நாளை(திங்கட்கிழஐம) நள்ளிரவு 12 மணிவரை பெங்களூருவில் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள், தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படாது என்றும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தனியார் வாகன சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு தனியார் பஸ் சங்கங்கள், ஆட்டோ, ஓலா, ஊபர் உள்ளிட்ட 32 சங்கங்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.
போராட்டம்
விமான நிலையத்திற்கு செல்லும் கார்களும் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல், தனியார் பள்ளிகளுக்கும் ஆட்டோ, கார், வேன்கள் இயக்கப்படாது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தனியார் பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) திறப்பதா?, வேண்டமா? என்பது குறித்து இன்று முடிவு எடுக்க உள்ளதாக தெரிகிறது.
நாளை காலையில் சுதந்திர பூங்காவில் தனியார் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் அரசுக்கு எதிராகவும், சக்தி திட்டத்திற்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
கூடுதல் அரசு பஸ்கள் இயக்கம்
இதற்கிடையே பெங்களூருவில் கூடுதலாக பி.எம்.டி.சி.(அரசு) பஸ்களை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. மேலும் டிரைவர்கள் மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள் கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மெட்ரோ ரெயில் சேவையையும் அதிகப்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பெங்களூருவில் வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஓடாமல் இருக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.