மேற்கு வங்காளம் சிலிகுரியில் இருந்து காத்மாண்டுக்கு பேருந்து சேவை தொடக்கம்..!
|மேற்கு வங்காளம் சிலிகுரியில் இருந்து காத்மாண்டுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சிலிகுரி,
வட மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி மற்றும் நேபாளத்தின் காத்மாண்டுக்கு இடையேயான பேருந்து சேவையை மாநில போக்குவரத்து மந்திரி பிர்ஹாத் ஹக்கீம், சந்திப்பு பேருந்து நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வட மேற்கு வங்காள மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இந்த பேருந்து சேவை தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. நகரத்தில் உள்ள டென்சிங் நோர்கே பஸ் டெர்மினஸில் இந்த பேருந்துக்கான டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. டிக்கெட்டுகளின் விலை ரூ.1,500 ஆகும்.
40 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்து சிலிகுரியில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் என்றும் மாலை 3 மணிக்கு புறப்படும் என்றும் மந்திரி ஹக்கீம் தெரிவித்தார். மேலும், மேற்கு வங்கள அரசு சிலிகுரியில் இருந்து பங்களாதேசுக்கும் பேருந்து சேவையை திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சிலிகுரி, டார்ஜிலிங் மற்றும் அண்டை நாடான சிக்கிம் ஆகிய இடங்களுக்கு வாழ்வாதாரத்திற்காகச் செல்லும் நூற்றுக்கணக்கான நேபாள மக்களுக்கு இந்த சேவை பயனளிக்கும் என்றும் இது இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.