ஒடிசாவில் டேங்கர் லாரியுடன் பஸ் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
|ஒடிசாவில் டேங்கர் லாரியுடன் பஸ் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஹிஞ்ஜிலி என்ற பகுதி அருகே இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் மற்றும் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த மோதலின் தாக்கத்தால் டேங்கர் லாரி சாலையோரம் இருந்த டீக்கடையின் மீது கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் டீக்கடையில் அமர்ந்திருந்த 4 பேர் மற்றும் பஸ்சில் பயணித்த ஒரு பயணி என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 12 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.