வீட்டையே தீ வைத்து கொளுத்துவது பா.ஜனதாவின் இந்துத்வா - உத்தவ் தாக்கரே சாடல்
|வீட்டில் அடுப்பை எரிய வைக்க உதவுவது எங்களின் இந்துத்வா, வீட்டையே தீ வைத்து கொளுத்துவது தான் பா.ஜனதாவின் இந்துத்வா என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை,
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மராட்டியத்தில் தேர்தலை முன்னிட்டு கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தனியார் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மையும் எல்லோரையும் பாதித்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் மக்கள் கோபத்தில் உள்ளனர். தேர்தலில் பா.ஜனதா இதுதொடர்பாக மக்களுக்கு எந்த விளக்கத்தையும் அளிக்க தவறிவிட்டது. நாங்கள் எங்களின் இந்துத்வா கொள்கையை கைவிடவில்லை. எதிர்காலத்திலும் கைவிட மாட்டோம்.
வீட்டில் அடுப்பை எரிய வைக்க உதவி செய்வது தான் எங்களின் இந்துத்வா. வீட்டையே தீ வைத்து கொளுத்துவது தான் பா.ஜனதாவின் இந்துத்வா. பிரதமர் மோடி சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் இந்துத்வா அல்லது அவரின் நோக்கங்களை புரிந்து கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.