வீடு புகுந்து திருட்டு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
|அஜ்ஜாம்புரா அருகே வீடு புகுந்து திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா டவுன் சந்தை பகுதியில் வசித்து வருபவர் பாபு. இவர் நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். இதையறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை திருடி விட்டு தப்பி சென்றனர். இதையடுத்்து வீடு திரும்பிய பாபு, கதவின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்பிலான தங்கநகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப்போய் இருந்தது.
அப்போது தான் அவருக்கு மர்மநபர்கள் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அஜ்ஜாம்புரா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.