< Back
தேசிய செய்திகள்
சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.16 லட்சம் நகைகள் கொள்ளை
தேசிய செய்திகள்

சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.16 லட்சம் நகைகள் கொள்ளை

தினத்தந்தி
|
15 March 2023 3:10 AM IST

கோலார் தாலுகா கேம்போடி கிராமத்தில் உள்ள சவுடேஸ்வரி கோவிலில் ரூ.16 லட்சம் மதிப்பிலான அம்மன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கோலார் தங்கவயல்:

கோலார் தாலுகா கேம்போடி கிராமத்தில் உள்ள சவுடேஸ்வரி கோவிலில் ரூ.16 லட்சம் மதிப்பிலான அம்மன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சவுடேஸ்வரி அம்மன் கோவில்

கோலார்(மாவட்டம்) தாலுகா கேம்போடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கு பக்தர்கள் அளித்த காணிக்கை, நன்கொடை மூலம் ரூ.16 லட்சத்தில் தங்க நகைகள் செய்யப்பட்டு அணிவிக்கப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி மஞ்சுநாத் சாஸ்திரி பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை வழக்கம் போல் கோவில் கதவை திறக்க பூசாரி மஞ்சுநாத் சாஸ்திரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அம்மன் நகைகள் கொள்ளை

பதறிப்போன அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது அம்மன் நகைகள் அனைத்தும் மாயமாகி இருந்தது தெரியவந்தது. யாரோ மர்ம நபர்கள் கோவில் கதவை உடைத்து அம்மன் நகைகளை திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்தது. மர்ம நபர்கள் திருடிச்சென்ற அம்மன் நகைகளின் மொத்த மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அவர் உடனே கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோலார் தாலுகா புறநகர் போலீசார், கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிந்திருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். தடயங்களையும் கைப்பற்றினர். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதையடுத்து போலீசார் தாங்கள் கைப்பற்றிய தடயங்களை ஆய்வுக்காக தடய அறிவியல் பிரிவினருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்