< Back
தேசிய செய்திகள்
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் வீடு புல்டோசர் கொண்டு இடிப்பு
தேசிய செய்திகள்

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் வீடு புல்டோசர் கொண்டு இடிப்பு

தினத்தந்தி
|
21 April 2024 3:03 PM IST

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் வீடு இடிக்கப்பட்டுள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் குனா பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆரியன் பதான் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

கூலி தொழிலாளியான ஆரியன் பதான் இளம்பெண்ணின் தாயார் பெயரில் உள்ள சொத்துக்கு ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து, ஆரியனுடனான காதலை இளம்பெண் துண்டித்துள்ளார்.

ஆனால், தொடர்ந்து தொல்லை கொடுத்த ஆரியன் பல மாதங்களாக இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், தனது பெயரில் சொத்துக்களை எழுதி தரும்படி அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

ஆனால், சொத்துக்களை எழுதி கொடுக்க மறுத்ததால் அப்பெண்ணை ஆரியன் அடித்து துன்புறுத்தியுள்ளார். இளம்பெண்ணின் கண்களில் மிளகாய்பொடி தூவியும், வாயை பசை வைத்து ஒட்டியும் துன்புறுத்தியுள்ளார். மேலும், அவரை சில மாதங்களாக பணய கைதி போல் வீட்டில் அடைத்து வைத்து தாக்கியுள்ளார். ஆரியனின் தாக்குதலில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆரியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தாக்குதல் நடத்திய ஆரியன் பதானின் வீட்டை அதிகாரிகள் இன்று இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

ஆரியனின் வீடு அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி அதை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்