பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு
|கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள், நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் என மொத்தம் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஏழைகள், குறைந்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு குறைந்த செலவில் வீடுகள் கட்டுவதற்கு வசதியாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிரதமர் வீடு கட்டும் திட்டம்) என்ற பெயரில் கடனுடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. நகர்ப்புறம், கிராமப்புறம் என்று 2 பகுதிகளாக இந்த திட்டம் பிரிக்கப்பட்டு, வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
கடந்த 2015-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்காக 80,671 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள், நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் என மொத்தம் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி, "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி கூடுதல் வீடுகள் கட்டுவதற்கு வசதி செய்யப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2.2 லட்சம் கோடி மத்திய உதவி உட்பட ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வீட்டுத் தேவைகள் நிறைவேற்றப்படும்"என்றார்.
நிதி மந்திரியின் இந்த அறிவிப்பு, வீடில்லா மக்களுக்கு புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள.. https://x.com/dinathanthi