சத்தீஷ்கார்: நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படை வீரர் பலி
|சத்தீஷ்காரில் இந்த வாரத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியது, இது இரண்டவது முறையாகும்.
ராய்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் கன்கேர் மாவட்டத்தில் பார்தாபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சடக்டோலா கிராமத்திற்கு அருகே எல்லை பாதுகாப்புப்படை மற்றும் மாவட்ட போலீசார் சேர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், பணியில் ஈடுப்பட்டிருந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் மீது நக்சலைட்டுகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும், அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படையை சேர்ந்த அகிலேஷ் ராய் (வயது 45) என்ற வீரர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து படுகாயம் அடைந்த வீரர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அகிலேஷ் பக்கஞ்சூருரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அகிலேஷ் உயிரிழந்தார்.
பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற நக்சலைட்டுகளை தேடும் பணியில் மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வாரத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியது இது இரண்டவது முறையாகும். நேற்று இதே போன்ற சம்பவம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த பாதுகாப்புப்படை வீரர்கள் மீது நக்சலைட்டுகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் ஒரு பாதுகாப்புப்படை வீரர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.