கர்நாடகாவில் கொடூரம்; லிவ்-இன் காதலியை பிரஷர் குக்கரால் அடித்து கொன்ற கேரள வாலிபர்
|3 ஆண்டுகளாக ஒன்றாக படித்து, ஒன்றாக தங்கி, லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்த காதலர்கள் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவின் தெற்கு பெங்களூரு பகுதியில் வாடகை கட்டிடம் ஒன்றில் காதலர்கள் 2 பேர் ஒன்றாக தங்கியுள்ளனர். இதில் காதலரான வைஷ்ணவ் (வயது 24) உள்ளூர் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் பிரிவில் செயலதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். அவருடன் ஒன்றாக வசித்த இளம்பெண் தேவி (வயது 24) தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், வைஷ்ணவுக்கு, திடீரென தேவி மீது சந்தேகம் வந்துள்ளது. அவருக்கு வேறு எவருடனோ தொடர்பு உள்ளது என்று சந்தேகித்துள்ளார். இதுபற்றி தேவியிடம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினமும் இதுபோன்று தகராறு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டனர். இதில், ஆத்திரத்தில் அந்த நபர், பிரஷர் குக்கரை கொண்டு அந்த பெண்ணை அடித்து, தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், துடிதுடித்து உயிரிழந்து விட்டார்.
இதுபற்றி பெங்களூரு நகர தென்கிழக்கு மண்டல காவல் துறையை சேர்ந்த டி.சி.பி. பாபா கூறும்போது, இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். லிவ்-இன் முறையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். 3 ஆண்டுகளாக ஒன்றாக படித்த அவர்கள், வாடகை கட்டிடத்தில் ஒன்றாக வசித்து வந்தனர்.
அந்த பெண்ணை பற்றி சில தினங்களுக்கு முன்னர், குற்றவாளிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தகராறில், அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி படுகொலை என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு பற்றி அவர்களின் இரு குடும்பத்தினருக்கும் தெரிந்துள்ளது. அவர்கள் இருவரையும் பல்வேறு தருணங்களில் சமரசப்படுத்த முயன்றுள்ளனர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
லிவ்-இன் படுகொலைகள்
நாட்டில் லிவ்-இன் முறையில் ஒன்றாக வாழ்ந்து வரும் காதலர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, அது இதுபோன்ற கொடூர முடிவில் சென்று விடும் சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்து காணப்படுகின்றன.
டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின்னர், இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் பின்னர் அடுத்தடுத்து நடந்தேறி வெளிவந்தன.
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் வசித்து வந்த பி. சந்திர மோகன் (வயது 48) என்பவர் ஒய். அனுராதா ரெட்டி (வயது 55) என்பவருடன் லிவ்-இன் முறையில் தொடர்பில் இருந்து வந்து உள்ளார்.
5 ஆண்டுகளாக காதலியிடம் இருந்து ரூ.7 லட்சம் வரை பணம் வாங்கி கொண்டு திருப்பி தரவில்லை. வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார். தொகையை திருப்பி கேட்ட ஆத்திரத்தில், காதலியை கடுமையாக தாக்கி, கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்து உள்ளார். இதன்பின்னர், உடலின் பாகங்களை பல துண்டுகளாக ஆக்கியுள்ளார். அவற்றை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து விட்டு தப்பியுள்ளார். கடந்த மே மாதம் 12-ந்தேதி நடந்த இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோன்று, அரியானாவில் நிக்கி யாதவ் என்ற 25 வயது இளம்பெண் அவரது காதலரால், கொலை செய்யப்பட்டு பிரீசரில் அவரது உடல் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிப்ரவரி 9-ந்தேதி இரவில் நடந்த இந்த வழக்கில் காதலர் சாஹில் கெலாட், அவரின் தந்தை, உறவினர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதற்கு அடுத்த நாள் கெலாட்டுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த முடிவாகி இருந்தது. லிவ்-இன் முறையில் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், கெலாட்டின் திருமணம் பற்றி அறிந்து அதுபற்றி கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால், குடும்பத்தினரின் உதவியுடன் நிக்கி கொல்லப்பட்டார்.
இது நடந்த சில நாட்களில் பிப்ரவரி 12-ந்தேதி மராட்டியத்தில் பால்கர் நகரில் மேகா தோர்வி (வயது 37) என்பவர் லிவ்-இன் முறையில் வாழ்ந்த காதலர் ஹர்திக் ஷா என்பவரால் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதற்கு முன்பு, டெல்லியில் கடந்த ஆண்டு லிவ்-இன் முறையில் காதலருடன் ஒன்றாக வாழ்ந்த ஷ்ரத்தா வாக்கர் என்பவர் தனது காதலரான அப்தாப் அமீன் பூனாவல்லா என்பவரால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவம் நடந்தது. இந்த படுகொலை நடந்து 6 மாதங்களுக்கு பின்னர், கடந்த ஆண்டு நவம்பரில் வெளியே தெரிய வந்தது. இந்த வழக்கில் அப்தாப் கைது செய்யப்பட்டார்.