பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொன்று பீப்பாயில் வைத்து உடல் வீச்சு
|பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொன்று, அவரது உடலை பீப்பாயில் வைத்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொன்று, அவரது உடலை பீப்பாயில் வைத்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பீப்பாயில் இளம்பெண் உடல்
பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தின் 1-வது நடைமேடையின் இறுதி பகுதியில் ஒரு பீப்பாய் (பிளாஸ்டிக் டிரம்) இருந்தது. அதன் மீது துணிகள் போடப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் பீப்பாயில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பீப்பாய் மீது கிடந்த துணிகளை எடுத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.
அதற்குள் ஒரு இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து, பெண்ணின் உடலை கைப்பற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த பெண்ணுக்கு 20 வயது இருக்கும். அவருக்கு திருமணமாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பெண்ணை கொலை செய்துவிட்டு, அவரது உடலை நடைமேடையில் கிடந்த பீப்பாய்க்குள் வைத்து மர்மநபர்கள் திணித்தது தெரியவந்தது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
ஆனால் அந்த பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இளம்பெண்ணை வேறு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு, போலீசாரின் கவனத்தை திசை திருப்பவும், சாட்சிகளை அழிக்கும் நோக்கத்திலும் பெண்ணின் உடலை பீப்பாயில் வைத்து திணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் 1-வது நடைமேடையில் இருக்கும் சில கண்காணிப்பு கேமராக்களை மர்மநபர்கள், திருப்பி வைத்துவிட்டு, இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மர்மநபர்களை பிடிக்க ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி ரெயில்வே போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் நேற்று பரபரப்பு உண்டானது. கடந்த மாதம் (டிசம்பர்) 6-ந் தேதி கோலாரில் இருந்து பெங்களூருவுக்கு வந்த ரெயிலில் ஒரு பெண்ணை கொலை செய்து, உடலை மர்மநபர்கள் துணியால் சுற்றி வைத்து சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.