மேற்கு வங்காளத்தில் சாதுக்கள் 3 பேர் மீது கொடூர தாக்குதல் - 12 பேர் கைது
|தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாதுக்களை மீட்டு காசிப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
புருலியா,
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 3 சாதுக்கள் மேற்கு வங்க மாநிலம், கங்காசாகரில் நடைபெறும் மகர சங்கராந்தி திருவிழாவுக்கு ஒரு வாடகை வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள், கடந்த வியாழக்கிழமை மாலை, மேற்கு வங்க மாநிலம், புருலியா மாவட்டத்தை அடைந்தனர். மேற்கொண்டு செல்லும் வழி குறித்து இவர்களில் ஒரு சாது, அங்கு இருந்த 3 சிறுமிகளிடம் வழிகேட்டார். அவரைக் கண்டு சிறுமிகள் பயந்து கூச்சலிட்டு ஓடியதால், உள்ளூர்வாசிகள் அங்கு திரண்டனர். மேலும், அவர்கள் குழந்தைகளைக் கடத்துபவர்கள் என நினைத்து, ஆவேசமடைந்த உள்ளூர்வாசிகள் சாதுக்களைப் பிடித்து தாக்கினர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாதுக்களை மீட்டு காசிப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து புருலியா காவல் கண்காணிப்பாளர் அபிஜித் பானர்ஜி கூறுகையில், சாதுக்கள் வழி தவறி வந்ததால், சிறுமிகளிடம் வழி கேட்டுள்ளனர். மொழி பிரச்சினை காரணமாக அவர்கள் தங்களைக் கடத்த முயற்சிப்பதாக சிறுமிகள் ஓடியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுகிறது என்றார்.
இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சாதுக்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசை பாஜக சாடியுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில பாஜக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மம்தா பானர்ஜியின் காது கேளாத மவுனம் அவமானகரமானது. இந்து சாதுக்கள் உங்கள் அங்கீகாரத்துக்கு தகுதியற்றவர்களா? இந்த அட்டூழியத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.