மத்திய பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்தையும் பலப்படுத்தும் என நம்புகிறேன்: பிரதமர் மோடி
|நடுத்தர பிரிவு மக்களை பட்ஜெட் பலப்படுத்தி உள்ளது என மும்பை நடந்த வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் சி.எஸ்.எம்.டி. - சோலாப்பூர், சி.எஸ்.எம்.டி. - ஷீரடி இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: -
இந்த நாள் இந்திய ரெயில்வேக்கு மிகப்பெரிய நாள். ஒரே நாளில் 2 வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த ரெயில்கள் வணிக நகரங்களான மும்பை, புனேயை இணைக்கின்றன. கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், தொழில்அதிபர்கள், பக்தர்கள், விவசாயிகளுக்கு இந்த ரெயில்மிகுந்த பயன் அளிக்கும். வந்தே பாரத் ரெயில் இந்தியாவின் வேகம், உயரத்தை பிரதிபலிக்கிறது. நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 10 வந்தே பாரத் ரெயில்கள் 108 மாவட்டங்கள், 17 மாநிலங்கள் வழியாக இயக்கப்படுகிறது.
சம்பளம் வாங்கு நபர், வியாபாரம், வணிகத்தில் ஈடுபடும் மக்கள் என நடுத்தர பிரிவை சேர்ந்த யாராக இருந்தாலும் இந்த பட்ஜெட் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளனர். 2014-ம் ஆண்டுக்கு முன் ரூ.2 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்தினர். எங்கள் அரசு முதலில் ரூ.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளித்தது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் அது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 20 சதவீதம் வரி செலுத்தியவர்கள், தற்போது எந்த வரியும் செலுத்த வேண்டியது இல்லை. புதிய வேலையில் சேர்ந்தவர்கள், சேமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மத்திய பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்தையும் பலப்படுத்தும் என நம்புகிறேன். எல்லோரும் வல்லரசு இந்தியாவை உருவாக்க வேண்டும்"என்றார்.