ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் சிறுவனை கொலை செய்த அண்ணன், தம்பி
|ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை கொன்று உடலை குளத்தில் வீசிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மராட்டியம் மாநிலம் நவிமும்பை தலோஜா அருகே உள்ள குளத்தில் கடந்த 25-ந்தேதி சிறுவன் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு நடத்திய ஆய்வில், சிறுவன் கைகள் கட்டப்பட்ட நிலையில் தலையில் காயம் இருந்ததை கண்டனர். இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காணாமல் போனதாக யாரேனும் புகார் கொடுத்து உள்ளனரா? என விசாரித்தனர்.
இதில், ஷீல்டைகர் போலீசில் சிறுவன் காணாமல் போனதாக புகார் அளித்து இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனை சம்பவத்தன்று ரம்ஜான் முகமது (வயது20), அவரது சகோதரர் ஆசாத் முகமது(30) ஆகிய 2 பேர் அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதன் விவரம் வருமாறு:-
சம்பவத்தன்று ரம்ஜான் முகமது சிறுவனை மறைவிடத்திற்கு அழைத்து சென்று ஓரினச்சேர்க்கைக்கு முயன்றுள்ளார். இதற்கு சிறுவன் மறுத்து சத்தம்போட்டு உள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவர் அங்கு கிடந்த கல்லை எடுத்து சிறுவன் தலையில் தாக்கி உள்ளார். மேலும் துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் உடலை மறைக்க தனது சகோதரர் ஆசாத் முகமதுவுடன் சேர்ந்து சிறுவனின் கைகளை கயிற்றால் கட்டி குளத்தில் வீசிவிட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அண்ணன், தம்பி 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.