< Back
தேசிய செய்திகள்
மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி சாவு; சட்டவிரோதமாக அமைத்த மின்வேலி உயிரை பறித்த பரிதாபம்
தேசிய செய்திகள்

மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி சாவு; சட்டவிரோதமாக அமைத்த மின்வேலி உயிரை பறித்த பரிதாபம்

தினத்தந்தி
|
5 Nov 2022 5:35 AM IST

கோலார் தங்கவயலில் மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி உயிரிழந்தனர். அவர்கள் சட்டவிரோதமாக அமைத்த மின்வேலி, 2 பேரின் உயிரையும் பறித்துள்ளது.

கோலார் தங்கவயல்:

பன்றிகள் அட்டகாசம்

கோலார் தங்கவயல் தாலுகா ஆண்டர்சன் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட லட்சுமி சாகர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவரது தம்பி முரளி (28). விவசாயிகளான இவர்களுக்கு அந்த பகுதியில் சொந்தமாக விளைநிலம் உள்ளது. இந்த நிலையில் அவர்களது விளைநிலங்களில் பன்றிகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விளைநிலத்தை சுற்றி அவர்கள் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தனர். இந்த நிலையில் ரமேஷ் மற்றும் முரளி ஆகிய இருவரும் தங்களது விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் விளைபயிர்களுக்கு தண்ணீர் பய்ச்சி கொண்டிருந்தனர்.

2 பேர் சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக ரமேஷ் அந்த மின்வேலியில் கையை வைத்துள்ளார். அந்த சமயத்தில் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை பார்த்து அதிர்சி அடைந்த அவரது தம்பி முரளி, அண்ணன் ரமேசை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர்மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைபார்த்த அருகில் உள்ள விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஆண்டர்சன்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்