இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் தாயார் பெங்களூரு வருகை
|இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் தாயார் உஷா சுனக் பெங்களூருவுக்கு வந்தார். அவர் சிக்பேட்டை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் சம்பந்தி சுதா மூர்த்தி யுடன் பங்கேற்றார்.
பெங்களூரு:
ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றுடன் அந்த மாநாடு நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட பல்வேறு நாட்டின் அதிபர்கள், பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளனர். அவர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் வந்துள்ளனர். அதுபோல் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், தனது மனைவியும், பெங்களூருவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் சுதா மூர்த்தி- நாராயணமூர்த்தி தம்பதியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி, தனது தாய் உஷா சுனக் மற்றும் குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார். இதில் ரிஷி சுனக்கின் தாயார் உஷா சுனக் நேற்று பெங்களூருவில் தனது சம்பந்தி சுதா மூர்த்தி வீட்டுக்கு வந்தார். அவருக்கு சுதாமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பின்னர் உஷா சுனக்கும், சுதா மூர்த்தியும், பெங்களூரு சிக்பேட்டை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. உதய் கருடாச்சார் வீட்டில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்றனர். இதையொட்டி எம்.எல்.ஏ. தனது வீட்டில் கிருஷ்ணரின் அவதாரங்கள், லீலைகள் தொடர்பான கொளு பொம்மைகளை வைத்திருந்தார்.
அவற்றை சுதா மூர்த்தி, உஷா சுனக்கிற்கு விளக்கி கூறினார். மேலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையிலும் உஷா சுனக் கலந்துகொண்டார். அத்துடன் அவர் பூஜை முடிந்த பிறகு குங்குமத்தை நெற்றியில் திலகமிட்டு கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ராஷ்டீரிய சுவயம் சேவா சங்க தலைவர் மஞ்சுநாத் மற்றும் பல்வேறு குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர். அவர்களுடன் உஷா சுனக் கலந்துரையாடினார். பின்னர் அங்கிருந்து சுதா மூர்த்தியும், அவரும் புறப்பட்டு சென்றனர்.