< Back
தேசிய செய்திகள்
பீகாரில் பழம்பெருமை வாய்ந்த  ஆங்கிலேயர் காலத்து கட்டிடம் இடித்து தகர்ப்பு!
தேசிய செய்திகள்

பீகாரில் பழம்பெருமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து கட்டிடம் இடித்து தகர்ப்பு!

தினத்தந்தி
|
29 Jun 2022 9:54 PM IST

பீகாரில் பழம்பெருமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து கட்டிடம் இடித்து தகர்க்கப்பட்டது.

பாட்னா,

பீகாரில் பழம்பெருமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து கட்டிடம் இடித்து தகர்க்கப்பட்டது.ஆஸ்கர் விருது பெற்ற 'காந்தி' திரைப்படத்தின் முக்கிய காட்சிகளில் இடம் பெற்றிருந்த ஆங்கிலேயர் கால கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க பிரிட்டிஷ் கால கட்டிடம், பாட்னா மாவட்ட கலெக்டர் அலுவலகமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நேர்த்தியான இரண்டு மாடி பிரதான கட்டிடம் புல்டோசர்கள் உதவியுடன் இடிக்கப்பட்டது. இது பாரம்பரிய ஆர்வலர்கள் மற்றும் காந்தியவாதிகள் மத்தியில் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் அரசின் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. புதிய கலெக்டர் அலுவலக வளாகம் அங்கு கட்டப்பட உள்ளது.

அந்த கட்டிடத்தில் இருந்த உயர் கூரைகள், பாரிய கதவுகள் மற்றும் கூரையில் மிகவும் பழமையான மற்றும் தனித்துவமான ஸ்கைலைட்கள் கொண்ட டச்சு கால ரெக்கார்ட் ரூம் உள்ளிட்டவை இடிக்கப்பட்டன.

இந்த கட்டிடம் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கு முகப்பில் பொருத்தப்பட்ட இரும்பினால் செய்யப்பட்ட சுழல் படிக்கட்டுகள கண்களை அலங்கரிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

இந்த நிலையில், அங்குள்ள பழைய பாதுகாப்பு பெட்டகங்கள், கடிகாரங்கள் மற்றும் தளபாடங்கள், தொங்கும் ஸ்கைலைட்கள், சுழல் படிக்கட்டு, பழங்கால ஸ்டீம்ரோலர் மற்றும் மிகவும் பழமையான அச்சு இயந்திரம் போன்ற வரலாற்று கலைப்பொருட்களை மீட்டெடுக்குமாறு நகரத்தின் பாரம்பரிய ஆர்வலர்கள் முன்பு அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

வரலாற்று சிறப்புமிக்க பாட்னா கலெக்டர் அலுவலக வளாகம் இடிக்கும் பணிகள் கடந்த மாதம் தொடங்கியதில் இருந்து, பல வரலாற்றாசிரியர்கள், அறிஞர்கள், பாதுகாப்பு கட்டிடக்கலை நிபுணர்கள், காந்தியவாதிகள் மற்றும் சாதாரண குடிமக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த கட்டிடத்தை இடிக்காமல் புனரமைப்பு செய்ய வேண்டுமென்று இந்த ஆண்டு மே 13 அன்று, பாரம்பரிய அமைப்பான இண்டாச் தொடுத்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்