இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் திடீர் நிலச்சரிவு - பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
|இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாலம் இடிந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சம்பா,
இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சம்பா மாவட்டத்தில் இன்று காலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து பாலம் இடிந்து விழுந்ததால் சம்பா-பர்மூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சம்பா மாவட்டத்தின் புறநகரில் உள்ள பார்மூர் கிராமத்தின் லூனா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த நிலச்சரிவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து துணை ஆணையர் டி.சி. ராணா கூறும்போது, இந்த பாலம் தேசிய நெடுஞ்சாலை 154-ஏ-ல் உள்ள 20 மீட்டர் நீளமுள்ள பாலமாகும். இது பார்மூர் பழங்குடியினர் பகுதியை சம்பாவுடன் இணைக்கிறது. பாலம் இடிந்ததால் முழுப் பகுதிக்கும் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை, இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் சோலி பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.