பெங்களூருவில் பாதுகாப்பற்ற முறையில் மேம்பாலங்கள்
|பெங்களூருவில் பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் மேம்பாலங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் மேம்பாலங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள்
தகவல் தொழில் நுட்ப நகரம் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் பெங்களூரு வேகமாக வளர்ந்து வருகிறது. நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் தொகை வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் நாட்டிலேயே அதிக வாகனங்கள் ஓடும் நகரங்களில் பெங்களூருவுக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. அதன்படி, பெங்களூருவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடுகிறது.
வாகனங்களின் பெருக்கத்திற்கு ஏற்றார் போல் பெங்களூருவில் மேம்பாலங்கள் அமைத்தல், சாலைகள் அமைத்தல், வெளிவட்ட சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை அரசும், பெங்களூரு மாநகராட்சியும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளை தடுக்கும் விதமாக நகரின் முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
1999-ம் ஆண்டு முதல் மேம்பாலம்
பெங்களூருவில் முதல் முறையாக கடந்த 1999-ம் ஆண்டு கே.ஆர்.மார்க்கெட்டில் இருந்து சிர்சி சர்க்கிள் வரை 2.57 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்திற்காக அப்போது ரூ.97 கோடி செலவு செய்யப்பட்டு இருந்தது. பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஒட்டு மொத்தமாக 47 மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் சிறிய மேம்பாலத்தில் இருந்து பெரிய மேம்பாலங்கள் வரை அடங்கும்.
அதாவது 23 ஆண்டில் பெங்களூருவில் 47 மேம்பாலங்கள் கட்டப்பட்டு இருக்கிறது. இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்கும் விதமாக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் தரமுடன் உள்ளதா?, வாகனங்கள் செல்லும் அளவுக்கு பாதுகாப்பாக உள்ளதா? என்று கேட்டால், அது கேள்வி குறியாகவே உள்ளது.
சும்மனஹள்ளி மேம்பாலம்
சில மேம்பாலங்கள் கட்டப்பட்ட சில ஆண்டுகளிலேயே இடிந்து விழுவது, தரமற்ற கட்டுமான பொருட்களால் கட்டப்பட்டு இருப்பது வேதனையான விஷயமாகும். பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த மேம்பாலத்திற்கு திறப்பு விழா நடத்தும் முன்பாகவே பேரிங் பழுது உள்ளிட்ட சில காரணங்களால், ஒரு வழிப்பாதையில் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
பின்னர் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு மேம்பாலத்தின் இரு பாதைகளிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. மேலும் நாகரபாவியில் இருந்து மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமார் நினைவிடத்திற்கு செல்லும் வெளிவட்ட சாலையில் சும்மனஹள்ளியில் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தில் கான்கிரீட் பெயர்ந்து பள்ளமாக காட்சி அளித்தது. இதனால் சும்மனஹள்ளி மேம்பாலத்தில் செல்லவே வாகன ஓட்டிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
தூண்களில் விரிசல்
இதன் காரணமாக சும்மனஹள்ளி மேம்பாலத்தில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, பள்ளம் விழுந்த பகுதியில் புதிதாக கான்கிரீட் போடும் பணிகள் நடைபெற்றது. அந்த பணிகள் தற்போது நிறைவு பெற்றிருக்கிறது. இதுபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீனியா மேம்பாலத்தில் உள்ள தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டது. அந்த மேம்பாலம் 4.5 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். விரிசல் காரணமாக கனரக வாகனங்கள் அந்த மேம்பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டது.
கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் இரவு நேரங்களில் லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்றதால், கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க பீனியா மேம்பாலத்தில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையும் உண்டானது. இதுபோன்று மேம்பாலங்கள் பாதுகாப்பு இல்லாமலும், தரமற்றதாக இருப்பதாலும், மேம்பாலங்களில் வாகன ஓட்டிகள் தங்களது உயிரை பணயம் வைத்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
3 மேம்பாலங்களில் பாதுகாப்பு இல்லை
மேற்கண்ட 3 மேம்பாலங்களின் நிலை மட்டும் இல்லாமல் நகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களிலும் பாதுகாப்பு தன்மை குறித்து வாகன ஓட்டிகள் மத்தியில்அச்சம் உருவாகி உள்ளது. சில மேம்பாலங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு இருப்பதால், வாகன ஓட்டிகள் கொஞ்சம் கவனக்குறைவாக சென்றாலும் விபத்தில் சிக்கி கொள்ள வாய்ப்புள்ளது. இதுபோன்று மேம்பாலங்கள் தரமற்றதாகவும், பாதுகாப்பு இல்லாமலும் இருப்பதை உணர்ந்த மாநகராட்சி, நகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக 27 மேம்பாலங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து நிபுணர்கள் குழுவினர் ஆய்வு நடத்தி மாநகராட்சிக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், மைசூரு ரோடு மேம்பாலம், சும்மனஹள்ளி மேம்பாலம், பி.இ.எல். சர்க்கிளில் உள்ள எம்.இ.எஸ். ரெயில்வே மேம்பாலம் பாதுகாப்புடன் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அந்த மேம்பாலங்களில் இருந்த பிரச்சினைகள் சரி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கேள்வி குறி
பெங்களூரு நகரில் உள்ள 47 மேம்பாலங்களையும் பராமரிக்கும் பொறுப்புகளை மாநகராட்சியும், பெங்களூரு வளர்ச்சி ஆணையமும் மேற்கொண்டு வருகிறது. அதாவது ஹெப்பால், ஜெயதேவ ஆஸ்பத்திரி, வெளிவட்ட சாலை உள்பட 24 மேம்பாலங்களை பராமரிக்கும் பொறுப்பு பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திடமும், மீதி 23 மேம்பாலங்களை பராமரிக்கும் பொறுப்பு மாநகராட்சியிடமும் உள்ளது. ஆனால் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாதது உள்ளிட்ட காரணங்களால் மேம்பாலங்களின் பாதுகாப்பு தன்மை கேள்வி குறியாகி இருப்பதுடன், வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் உள்ள மேம்பாலங்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
தரமாக இருக்க வேண்டும்
சிவாஜிநகரை சேர்ந்த கார் டிரைவர் அல்தாப் ஷெரீப் கூறும் போது, 'பெங்களூருவில் உள்ள மேம்பாலங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. நகரில் உள்ள அனைத்து சாலைகளும் பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் வாகனங்களை ஓட்டி செல்ல முடியவில்லை என்று, மேம்பாலங்களில் பயணிக்கிறோம். மேம்பாலங்களிலும் பள்ளங்கள் இருப்பதால் விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மேம்பாலங்களை தரமுடன் கட்ட வேண்டும். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மேம்பாலம் இருக்க வேண்டும்', என்றார்.
இதுபற்றி ஆட்டோ டிரைவரான அப்துல் ரஷீத் கூறுகையில், 'சாலைகளை போன்று மேம்பாலங்களை அடிக்கடி இடித்து விட்டு கட்ட முடியாது. மேம்பாலங்கள், ஆண்டு கணக்கில் வாகனங்கள் செல்வதற்காக கட்டப்படுகிறது. அப்படிப்பட்ட மேம்பாலங்கள் தரமாக இருக்க வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதனால் மேம்பாலங்களை பயன்படுத்துகிறோம். அந்த மேம்பாலங்களில் பாதுகாப்பான முறையில் செல்லும் விதமாக இருக்க வேண்டும்', என்றார்.
தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது
இதுபற்றி கே.ஆர்.புரம் தொகுதி ஆம்ஆத்மி கட்சி பொதுச் செயலாளர் சிவராமன் கூறுகையில், 'நகரில் உள்ள மேம்பாலங்கள் எதுவும் பாதுகாப்புடன் இல்லை. கே.ஆர்.புரத்தில் மேம்பால தடுப்பு சுவர் சமீபத்தில் இடிந்து விழுந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேம்பாலங்கள் எதுவும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. மேம்பாலங்களில் செடிகள் முளைத்திருக்கின்றன. அதனை கூட வெட்டி அகற்றுவதில்லை.
நகரில் உள்ள மேம்பாலங்கள் வாகன ஓட்டிகளின் உயிரை பறிக்கும் விதமாகவே இருக்கிறது. மாநகராட்சியிடம் நான் பலமுறை புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. வாகன ஓட்டிகளின் நலன் கருதி அனைத்து மேம்பாலங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது பராமரிப்பு பணிகள், அதன் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு நடத்தினால் சரியாக இருக்கும்', என்றார்.