< Back
தேசிய செய்திகள்
பணி நியமனத்தில் லஞ்சம்; பணத்துடன் டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பகிரங்க குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

பணி நியமனத்தில் லஞ்சம்; பணத்துடன் டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பகிரங்க குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
18 Jan 2023 1:33 PM GMT

செவிலியர் பணி நியமனத்தில் எனக்கு ரூ.15 லட்சம் லஞ்சம் கொடுத்தனர் என சட்டசபைக்கு பணத்துடன் வந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.



புதுடெல்லி,


டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.வாக மொஹிந்தர் கோயல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், டெல்லி சட்டசபையில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொண்ட அவர், கை நிறைய இன்று கரன்சி நோட்டுகளுடன் காணப்பட்டார். இதனால் உறுப்பினர்கள் என்ன, ஏது என்று ஆச்சரியமுடன் பார்த்தனர்.

ஆனால், பணத்துடன் அவர் கூறும்போது, அரசால் நடத்தப்படும் பாபா சாஹேப் அம்பேத்கார் மருத்துவமனையில், பணி நியமனத்தில் ஊழல் நடந்து உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

தொடர்ந்து அவர், பாபா சாஹேப் அம்பேத்கார் மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் பிற பணிகளுக்கான ஆள் தேர்வுக்கான டெண்டர் விடப்பட்டது.

அரசு விதியின்படி, 80 சதவீத பழைய ஊழியர்களை தக்க வைக்க வேண்டும் என கூறப்படுகிறது. எனினும், அதற்கு பதிலாக செவிலியர் பணி நியமனம் என்ற பெயரில் பெரிய அளவில் பணம் விளையாடல் நடந்து உள்ளது.

பணி நியமனத்திற்கு பின்னரும் கூட செவிலியர்கள் மற்றும் மருத்துவமனையின் பிற பணியாளர்கள் முழுமையான சம்பளம் பெறவில்லை. ஒப்பந்ததாரர்கள் அவர்களின் சம்பளத்தில் பெரும் தொகையை எடுத்து கொண்டனர்.

இதுபற்றி மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தி இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வர ஊழியர்கள் சமீபத்தில் முற்பட்டனர். ஆனால், தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் பற்றி கவர்னர் சக்சேனா, டி.சி.பி., தலைமை செயலாளருக்கு முன்பே தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

ஊழல்வாதிகள் என்னை வழக்கில் சிக்க வைக்க முயல்கின்றனர். ஊழல் பற்றி டி.சி.பி.யிடம் முன்பே கூறினேன். அரசில் நடந்த இந்த ஊழலை வெளி கொண்டு வருவதற்காகவும், பின்னால் உள்ள பெரிய நபர்களை அடையாளப்படுத்தவும், உள்நோக்கத்துடன் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கினேன்.

அதுபற்றி டி.சி.பி.யிடம் கூறினேன். குற்றவாளிகளை கையும் களவும் ஆக பிடிக்க விரும்பினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஊழலில் பெரிய நபர்கள் தொடர்பில் உள்ள நிலையில், எனது வாழ்வை பணயம் வைத்தேன். இதில், பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்