அதிகாரிகள் பணி இடமாற்றலுக்கு லஞ்சம்- அரசு மீது அஸ்வத்நாராயணா கடும் தாக்கும்
|அதிகாரிகள் பணி இடமாறுதலுக்கு லஞ்சம் கைமாறுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சட்டசபையில் மந்திரி பிரியங்க் கார்கே, அஸ்வத் நாராயண் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது.
பெங்களூரு:-
எவ்வளவு லஞ்சம்
கர்நாடக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் குமாரசாமி பேசினார். அப்போது அவர், ஒரு குறிப்பிட்ட துறையில் பணி இடமாறுதலுக்கு ஒவ்வொரு பதவிக்கும் எவ்வளவு லஞ்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பட்டியலை முதல்-மந்திரிக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார். மேலும் அவர், முந்தைய பா.ஜனதா ஆட்சியில் காங்கிரசார், இதே போல் லஞ்ச பட்டியலை வெளியிட்டனர் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே, "முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நாங்கள் அந்த லஞ்ச பட்டியலை வெளியிட்டது உண்மை தான். ஆனால் ஒவ்வொரு பதவிக்கும் எவ்வளவு லஞ்சம் என்பதை நாங்கள் கூறவில்லை. பா.ஜனதாவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. தான் கூறினார். அதை நாங்கள் வெளியிட்டோம்" என்றார்.
ஆதாரம் வெளியிடுங்கள்
இதனால் கோபம் அடைந்த பா.ஜனதா உறுப்பினர் அஸ்வத் நாராயண், "அந்த லஞ்ச பட்டியலுக்கு ஏதாவது ஆதாரம் இருந்தால் நீங்கள் (பிரியங்க் கார்கே) வழங்க வேண்டும். உங்கள் துறையில் நடைபெறும் பணி இடமாறுதலுக்கு கைமாறும் லஞ்சம் குறித்த பட்டியல் எங்களிடம் உள்ளது. அதை நாங்கள் வெளியிடுகிறோம்" என்று ஆவேசமாக பேசினார்.
அதற்கு பிரியங்க் கார்கே, லஞ்ச புகாருக்கு ஏதாவது ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள் என்று நான் சவால் விடுக்கிறேன் என்றார். அப்போது பிரியங்க் கார்கே மற்றும் அஸ்வத் நாராயண் ஆகிய இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபாநாயகர் யு.டி.காதர் கேட்டுக் கொண்டதை அடுத்து அவர்கள் இருவரும் அமைதியாகி இருக்கையில் அமர்ந்தனர்.