மின்சார துறையில் அதிகாரி பணி இடமாற்றத்திற்கு ரூ.10 கோடி லஞ்சம்;குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
|மின்சார துறையில் அதிகாரி பணி இடமாற்றத்திற்கு ரூ.10 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஆடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு:
மின்சார துறையில் அதிகாரி பணி இடமாற்றத்திற்கு ரூ.10 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஆடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பென்டிரைவை காட்டிய குமாரசாமி
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்ய லஞ்சம் பெறப்படுவதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு கூறி வருகிறார். மேலும் முதல்-மந்திரி அலுவலகத்தில் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் அவர் மற்றொரு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். ஆனால் குமாரசாமி ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், மின்சார துறையில் அதிகாரிகள் இடமாற்றத்திற்கு ரூ.10 கோடி லஞ்சம் பெறப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பாக நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறி, அதற்கான பென்டிரைவை காட்டி நேற்று பெங்களூரு விதானசவுதாவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பணம் வசூலித்த டி.கே.சிவக்குமார்
மாநிலத்தில் கடந்த 2009-10-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. அப்போது வடகர்நாடக மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்தனர். அந்த சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் செயல் தலைவராக இருந்த டி.கே.சிவக்குமார் வடகர்நாடக மக்களுக்கு உதவுவதற்காக பணம் வசூல் செய்தார். அந்த பணத்தை வடகர்நாடக மக்களுக்கு கொடுக்கவில்லை.
அவரே வைத்து கொண்டதுடன், அந்த பணத்தை செலவு செய்து உல்லாசமாக இருந்தார். விமானத்தில் டெல்லிக்கு பறந்தார். ஏழை மக்களுக்கு செல்ல வேண்டிய பணத்தை செலவு செய்தவர் தான் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார். காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்ய லஞ்சம் பெறப்படுகிறது. இதனை ஆதாரத்துடன் தான் கூறி வருகிறேன்.
ரூ.10 கோடி லஞ்சம்
மின்சார துறையில் ஒரு அதிகாரி பணி இடமாற்றத்திற்கு ரூ.10 கோடி கொடுத்திருக்கிறார். ரூ.10 கோடி கொடுப்பதன் மூலம், தினமும் ரூ.50 லட்சம் வரை அந்த அதிகாரியால் சம்பாதிக்க முடியும். அந்த அதிகாரியை பணி இடமாற்றம் செய்ய ரூ.10 கோடி பெறப்பட்டதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த பென்டிரைவில் ஆடியோ ஆதாரத்தை பத்திரமாக வைத்துள்ளேன். நேரம் வரும் போது, அதனை வெளியிடுவேன். இதுபோல் மற்றொரு அதிகாரியை இடமாற்றம் செய்யவும் பணம் கைமாறி இருக்கிறது.
நான் அதிகாரத்தில் இல்லாததால் வாய்க்கு வந்ததை பேசுவதாக காங்கிரசார் சொல்கிறார்கள். நான் ஆதாரம் இல்லாமல் எந்த குற்றச்சாட்டுகளையும் கூறுவதில்லை. பதவியில் இருக்கும் போது ஏழை மக்களுக்கான பிரச்சினைகளை சரி செய்துள்ளேன். ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போது மக்களுக்காக வீதியில் இறங்கி போராடி வருகிறேன்.