வாகனங்களை மறித்து தலா ரூ.50 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர்
|கொப்பல் அருகே வாகனங்களை மறித்து தலா ரூ.50 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர், வீடியோ எடுத்ததால் சூட்கேசுடன் தப்பி ஓடினார்.
கொப்பல்:
கொப்பல் அருகே வாகனங்களை மறித்து தலா ரூ.50 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர், வீடியோ எடுத்ததால் சூட்கேசுடன் தப்பி ஓடினார்.
லஞ்சம் வாங்கிய அதிகாரி
கொப்பல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக இருப்பவர் ஜவரேகவுடா. இவர் கெரேஹள்ளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கொப்பல் மாவட்டத்தில் உள்ள அஞ்சனாத்திரி மலைக்கு நேற்று கவர்னர் தாவர்சந்த் கெலாட் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஊடகத்தினர் ஒரு வேனில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வேனை மறித்த வட்டார போக்குரவத்து ஊழியர் ஒருவர், அவர்களிடம் வாகன உரிமம் ஆகியவற்றை பெற்று சோதனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதிகாரி ஜவரேகவுடாவிடம் லாரி டிரைவர் ஒருவர் லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றார். அதனை ஊடகத்தினர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய தொடங்கினர். இதனை பார்த்த ஜவரேகவுடா, லாரி டிரைவரிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்காமல் தவிர்த்தார். மேலும், லாரி டிரைவரை உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு கூறினார்.
சூட்கேசுடன் ஓட்டம்
இதையடுத்து வீடியோ எடுத்தவர்களை கண்டதும், ஜவரேகவுடா காரில் இருந்து ஒரு சூட்கேசுடன் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது வேனில் இருந்தவர்கள் அவரை பின்தொடர்ந்து செல்போனில் வீடியோ எடுத்தப்படி ஓடினர். அப்போது தான், அவர் அந்த வழியாக வரும் கனரக வாகன டிரைவர்களிடம் தலா ரூ.50 லஞ்சம் வாங்கியதும், அந்த பணத்தை சூட்கேசில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும், வேனில் வந்த சிலர் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுப்பதை அறிந்ததும் அவர், பணம் இருந்த சூட்கேசுடன் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து கொப்பல் மாவட்ட வட்டார போக்குவரத்து உயர் அதிகாரி லட்சுமிகாந்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.