< Back
தேசிய செய்திகள்
ஓய்வு பெற 3 நாட்களே இருந்த நிலையில் விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்; அரசு அதிகாரி கைது
தேசிய செய்திகள்

ஓய்வு பெற 3 நாட்களே இருந்த நிலையில் விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்; அரசு அதிகாரி கைது

தினத்தந்தி
|
28 May 2022 3:05 AM IST

மைசூருவில் ஓய்வு பெற 3 நாட்களே இருந்த நிலையில் விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார்.

மைசூரு

மைசூருவில் ஓய்வு பெற 3 நாட்களே இருந்த நிலையில் விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார்.

நில வரைபடத்திற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்

மைசூருவை சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு வரைபடம் பெற முடிவு செய்தார். இதற்காக அவர் மைசூரு டவுன் பகுதியில் இயங்கி வரும் நகர வளர்ச்சி வாரிய அலுவலகத்திற்கு(மூடா) சென்றார். அங்கு அவர் அதிகாரியாக இருந்து வரும் ஜெயசிம்மா என்பவரை அணுகினார்.

அப்போது அதிகாரி, ஜெயசிம்மா நிலவரைபடம் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாமல் ஊழல் தடுப்பு போலீசில் புகார் அளித்தார்.

அரசு அதிகாரி கைது

அந்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு படை போலீசார், விவசாயியிடம் ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அதனை அதிகாரி ஜெயசிம்மாவிடம் கொடுக்கும்படி சில அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர். அதன்பேரில் விவசாயியும், அரசு அதிகாரி ஜெயசிம்மாவை சந்தித்து பணத்தை கொடுத்தார்.

அதனை அவரும் வாங்கி கொண்டார். இதனை மறைவாக நின்று கவனித்த ஊழல் தடுப்பு படை போலீசார் ஜெயசிம்மாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கைதான அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற 3 நாட்களே...

மேலும் லஞ்ச வழக்கில் கைதான ஜெயசிம்மா வருகிற 31-ந் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெற 3 நாட்களே இருந்த நிலையில் லஞ்சம் பெற்று அரசு அதிகாரி கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்