பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
|தனியார் சேனலுக்கு தடை விதித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
புதுடெல்லி,
கர்நாடகாவை உலுக்கிய பிரஜ்வல் ரேவண்ணா, சூரஜ் ரேவண்ணா பாலியல் வீடியோ விவகாரத்தில், வீடியோவை விரிவாக காட்சிப்படுத்தியதாக கன்னட தனியார் செய்தி சேனலுக்கு அம்மாநில ஐகோர்ட்டு தடை விதித்தது. அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
விசாரணையில் கருத்துரிமையை பறிப்பது நோக்கமாக இருக்கிறது என விமர்சித்த சுப்ரீம் கோர்ட்டு, கருத்துரிமையை பாதுகாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என அறிவுறுத்தியது.
தனியார் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தி வைக்கப்பட்டது அரசியல் பழிவாங்கல் என்பது தெளிவாகிறது என குறிப்பிட்ட நீதிபதி, செய்தி நிறுவனத்திற்கு கர்நாடகா ஐகோர்ட்டு விதித்த ஒளிபரப்பு தடைக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார்.