டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 16 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்
|குழந்தையின் பெற்றோரிடம் டாக்டர்கள் பேசி உறுப்பு தானம் அளிக்க சம்மதம் பெற்றனர்.
புதுடெல்லி,
டெல்லியை சேர்ந்த உபிந்தர் என்ற தனியார் ஒப்பந்ததாரருக்கு பிறந்து 16 மாதங்கள் ஆன ரிஷாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 17-ந் தேதி அந்த குழந்தை தரையில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டது. மூளையில் சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 8 நாட்கள் சிகிச்சை பலனளிக்காத நிலையில், கடந்த 24-ந் தேதி, அக்குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து, குழந்தையின் பெற்றோரிடம் டாக்டர்கள் பேசி உறுப்பு தானம் அளிக்க சம்மதம் பெற்றனர். குழந்தையின் சிறுநீரகங்களும், கல்லீரலும் எடுக்கப்பட்டு, வேறு 2 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. அந்த குழந்தைகள் உயிர் பிழைத்தனர்.
மேலும், இதய வால்வுகளும், விழி வெண்படலமும் எடுக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேமித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மிக இளம் வயதில் உறுப்பு தானம் அளித்தவர் என்ற பெருமை, அந்த குழந்தைக்கு கிடைத்துள்ளது.