< Back
தேசிய செய்திகள்
பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் போலீஸ் பாதுகாப்பு குறித்து ஆய்வு
தேசிய செய்திகள்

பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் போலீஸ் பாதுகாப்பு குறித்து ஆய்வு

தினத்தந்தி
|
2 Sept 2022 8:44 PM IST

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர (சாலகட்ல) பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி ஆலோசனை செய்வது தொடர்பாக அனந்தபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரவிபிரகாஷ் திருமலைக்கு வந்தார். அவர், திருமலையில் உள்ள கோவில், மாட வீதிகள், தரிசன வரிசைகள், பக்தர்கள் ஓய்வறைகள், விடுதிகள், அன்னதானக்கூடம், புஷ்கரணி உள்பட பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நமது கடமை. பக்தர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது.

அன்று முதல்-மந்திரி ஒ.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்ய திருமலைக்கு வருகிறார். கருடசேவை அன்று அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள். வாகனச் சேவையின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீவிரவாத செயல்களை முறியடிக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். பிரம்மோற்சவ விழா வெற்றிகரமாக நடந்து முடிய போலீசாரின் அறிவுரைகளை பின்பற்றி பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்