'இந்திய மக்களின் புறக்கணிப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது' - மாலத்தீவு முன்னாள் அதிபர் வருத்தம்
|நடந்த நிகழ்வுகளுக்காக மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கோர விரும்புகிறார்கள் என முகமது நஷீத் தெரிவித்தார்.
புதுடெல்லி,
கடந்த ஜனவரி மாதம் லட்சத்திவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தனது பயணம் குறித்து 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "லட்சத்தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
பிரதமரின் இந்த பதிவை கேலி செய்யும் வகையிலும், இனவெறியை தூண்டும் வகையிலும் மாலத்தீவைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் ஆளும் கட்சியினர் சிலர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். இந்தியர்கள் சுகாதாரமற்றவர்கள் என்றும், ஒருபோதும் மாலத்தீவுடன் இந்தியாவால் போட்டியிட முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையான நிலையில், மாலத்தீவு செல்வதை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மாலத்தீவுக்கான சுற்றுலா திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்தில், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களுக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. நடந்த நிகழ்வுகளுக்காக மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கோர விரும்புகிறார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்கள் சுற்றுலாவுக்காக மாலத்தீவுக்கு வர வேண்டும். எங்கள் விருந்தோம்பலில் எந்த குறையும் இருக்காது" என்று தெரிவித்தார்.