மத்திய பிரதேசம்: பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு
|தந்தையுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்தார்.
தார்,
வடமாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக பட்டம் விடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். பட்டத்தில் மாஞ்சா நூல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எதிர்பாராத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் 7 வயது சிறுவன் பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தார் நகரில் உள்ள ஹத்வாரா சவுக் பகுதியில் வினோத் சவுகான் என்பவர் தனது ஏழு வயது மகனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு பட்டத்தின் மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தை அறுத்தது.
மாஞ்சா நூல் அறுத்ததில் சிறுவனின் கழுத்தில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. இதனால், அதிர்ச்சியடைந்த சவுகான் உடனடியாக தனது மகனை அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கிருந்து சிறுவன் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு வரப்பட்டபோது இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.