மராட்டியத்தில் பயங்கரம்.. கிண்டல் செய்ததால் சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்ற சிறுவன்
|பூட்டிய அறைக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம், வசாய் நகரில் 8 வயது சிறுமி கடந்த 1 ஆம் தேதி ஐஸ்கிரீம் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். வெகு நேரம் ஆகியும் சிறுமி திரும்பி வராத நிலையில் குடும்பத்தினர் பதற்றமடைந்தனர். பின்னர் அவரது குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வசாய் பகுதியில் திங்கட்கிழமை சோதனை செய்தனர். அப்போது பூட்டிய அறைக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதும், அந்த சிறுவன், சிறுமியை கொலை செய்ததும் தெரியவந்தது.
சிறுவனின் தந்தையிடம் விசாரித்ததில், மகனை ஜல்னா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு அனுப்பியது வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த சிறுமி தன்னை கிண்டல் செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட கோபத்தில், சம்பவத்தன்று இரவு தனியாக வீட்டைவிட்டு வெளியே வந்த சிறுமியை தன் வீட்டிற்கு இழுத்துச் சென்று கழுத்தை நெரித்து கொன்றதாகவும் சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
சிறுமியின் உடலை என்ன செய்வது என்று தெரியாததால், இரண்டு நாட்கள் தனது வீட்டில் மறைத்து வைத்திருக்கிறான். பின்னர் இது குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதையடுத்து இருவரும் சேர்ந்து சிறுமியின் உடலை தனி அறையில் மறைத்து வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தந்தை-மகனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.