17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
|மைசூரு அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மைசூரு:-
தொழிலாளி
மைசூரு மாவட்டம் கே.ஆர். நகர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது26). தொழிலாளி. இவருக்கும் உன்சூர் தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் செல்போன் மூலம் பேசி வந்தனர். மேலும் சிறுமியை பார்க்க, அவரது வீட்டிற்கு ஆனந்த் அடிக்கடி சென்று வந்தார்.
இந்தநிலையில் சிறுமியை ஆனந்த் திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி ஆனந்த் உன்சூரில் உள்ள கோவிலில் வைத்து சிறுமியை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் பெங்களூருவில் வசித்து வந்தனர். இதற்கிடையே சிறுமியை காணவில்லை என பெற்றோர் உன்சூர் புறநகர் போலீசில் புகார் அளித்தனர்.
சிறுமி மீட்பு
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சிறுமி பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு உன்சூருக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே போலீஸ் வருவதை அறிந்த ஆனந்த் தப்பியோடி விட்டார்.
பின்னர் சிறுமியிடம் சில அறிவுரைகளை கூறி பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த ஆனந்தை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், கே.ஆர். நகரில் பதுங்கி இருந்த ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை உன்சூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.