< Back
தேசிய செய்திகள்
புற்றுநோய் பாதித்த 5 வயது சிறுவன்...நோய் குணமாக குடும்பத்தினர் செய்த செயலால் உயிரிழந்த பரிதாபம்
தேசிய செய்திகள்

புற்றுநோய் பாதித்த 5 வயது சிறுவன்...நோய் குணமாக குடும்பத்தினர் செய்த செயலால் உயிரிழந்த பரிதாபம்

தினத்தந்தி
|
25 Jan 2024 2:46 PM IST

கங்கை நதியில் சிறுவனை அவனது அத்தை மூழ்கடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டேராடூன்,

டெல்லியை சேர்ந்த தம்பதி தனது 5 வயது மகனுடன் வசித்து வந்துள்ளனர். அந்த சிறுவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் சிறுவனின் பெற்றோர் டெல்லியில் உள்ள நவீன புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் சிறுவனின் ரத்த புற்றுநோயின் தாக்கம் அதிகமானதால் காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்ட அந்த சிறுவனின் பெற்றோர், புனித கங்கையில் நீராடினால் ரத்த புற்றுநோய் சரியாகிவிடும் என நினைத்தனர்.

இந்நிலையில், நேற்று டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாருக்கு புனித நீராட குடும்பத்துடன் சென்றுள்ளனர். இவர்களுடன் சிறுவனின் அத்தையும் சென்றுள்ளார். இவர்கள் அனைவரும் நேற்று கங்கை நதியில் இறங்கியுள்ளனர். அந்த சிறுவனை அவனது அத்தை நீரில் மூழ்கடித்துள்ளார். அவனை நீரில் மூழ்கடித்தபோது, அவனது பெற்றோர் பிரார்த்தனை செய்துள்ளனர். இதனை அருகில் உள்ளவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தது அந்த சிறுவனை தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது அந்த சிறுவனின் அத்தை, அவர்களுடன் சண்டையிட்டுள்ளார். ஆனாலும் அங்கு உள்ளவர்கள் அந்த சிறுவனை நீரில் இருந்து வெளியில் தூக்கியுள்ளனர். கரைக்கு கொண்டு வந்தபோது அந்த சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து இறந்த சிறுவனின் உடலை வைத்து அவனின் அத்தை பிரார்த்தனை செய்தது அங்கு உள்ளவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் இந்த சம்பவம் பற்றி அங்கு உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனின் பெற்றோர் மற்றும் அத்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்