குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன் - பிரதமர் மோடி டுவீட்
|குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த டிச. 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. மாலை 6 மணி நிலவரப்படி பாஜக 142 தொகுதிகளில் வெற்றி, மேலும் 14 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
156 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை எட்டி உள்ளது. காங்கிரஸ் 16 தொகுதிகளில் வெற்றி, மேலும்1 தொகுதியில் முன்னிலை. ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகளைப் பார்த்து நெகிழ்ச்சி அடைவதாகவும் குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"நன்றி குஜராத். இந்த அற்புதமான தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகுந்த உணர்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை ஆசீர்வதித்தனர். அதே நேரத்தில் இந்த வேகம் இன்னும் அதிக வேகத்தில் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், "கடினமாக உழைத்த குஜராத் பாஜக காரியகர்த்தாக்களுக்கு நான் சொல்ல விரும்புவது நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சாம்பியன்! நமது கட்சியின் உண்மையான பலமாக விளங்கும் நமது காரியகர்த்தாக்களின் அதீத உழைப்பின்றி இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகாது" என்று கூறியுள்ளார்.