< Back
தேசிய செய்திகள்
3-வது நாளாக எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
தேசிய செய்திகள்

3-வது நாளாக எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
20 July 2022 12:03 PM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 3வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே விலைவாசி உயர்வு, அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. விதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டியதால் இரு சபைகளிலும் அமளி நிலவியது.

2-வது நாளான நேற்று மக்களவை காலை 11 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு விலைவாசி உயர்வைக்கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை முழங்கினர். அவர்கள் விலைவாசி உயர்வுக்கு எதிரான முழக்கங்களைக்கொண்ட பதாகைகளையும் ஏந்தி இருந்தனர். இதனால் கடும் அமளி நிலவியது.

அமளி நீடித்ததால் சபையை மதியம் 2 மணி வரை அவர் ஒத்திவைத்தார். சபை 2 மணிக்கு மீண்டும் கூடியபோதும் காட்சிகள் மாறவில்லை. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., பிற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் சபையின் மையப்பகுதிக்கு வந்தனர். அவர்கள் விலைவாசி உயர்வு, உணவுப்பொருட்கள் உள்ளிட்டவற்றின்மீது புதிதாக சரக்கு, சேவை வரி விதித்து இருப்பது போன்றவற்றுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

அமளி நீடித்ததால், சபையை நடத்திக்கொண்டிருந்த பா.ஜ.க. எம்.பி. கிரிட் பிரேம்ஜிபாய் சோலங்கி, அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மக்களவையைப் போன்றே மாநிலங்களவையிலும் விலைவாசி உயர்வு, அக்னிபத் உள்ளிட்ட பிரச்சினைகள் எதிரொலித்தன. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சபை 2 மணி வரை ஒத்திவைப்பை சந்தித்தது. மீண்டும் சபை கூடியபோது, சபையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை அழைத்து, பேரழிவு ஆயுதங்கள், அவற்றின் வினியோக முறைகள் (சட்ட விரோத நடவடிக்கைகள் தடை) திருத்த மசோதாவை அறிமுகம் செய்யுமாறு கூறினார்.

ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க் கள் விலைவாசி உயர்வுக்கு எதிராக கோஷங்கள் போட்டாலும், அதற்கு மத்தியில் மந்திரி ஜெய்சங்கர் அந்த மசோதாவை அறிமுகம் செய்தார். சபையை அமளியில் இருந்து அமைதிக்கு திருப்ப துணைத்தலைவர் ஹரிவன்ஷ் முயற்சித்தும் பலன் இல்லை. அதைத் தொடர்ந்து சபையை அவர் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று குறிப்பிடத்தக்க எந்த அலுவலையும் மேற்கொள்ளாமல் முடங்கி ஒத்திவைப்புகளை சந்தித்தன.

இந்நிலையில் 3-வது நாளான இன்று நாடாளுமன்றம மழைக்கால கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு கூடியது. மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வான முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, இன்று பதவியேற்றுக்கொண்டார்.

தொடர்ந்து விலைவாசி உயர்வுக்கு எதிரான முழக்கங்களை எதிர்கட்சிகள் எழுப்பியநிலையில் இரு அவைகளிலும் கடும் அமளி நிலவியது. இதனைத்தொடர்ந்து இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்