"ஹே" என குறுஞ்செய்தி அனுப்பிய ஊழியர்.. அதிருப்தி அடைந்த முதலாளி - வைரலாகும் வாட்ஸ் அப் உரையாடல்
|"ஹே" என குறுஞ்செய்தி அனுப்பியதால் முதலாளி அதிருப்தி அடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுடெல்லி,
வாட்ஸ் அப் உரையாடலின் போது ஊழியர் ஒருவர் "ஹே" என குறுஞ்செய்தி அனுப்பியதால் முதலாளி அதிருப்தி அடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் முதலாளி ஒருவர் தனது ஊழியர் ஒருவரிடம் பேசிய வாட்ஸ் அப் ஸ்கிரின்ஷாட் வைரலாகி வருகிறது.
அதில் முதலில் சோதனை முடிந்ததா ? என முதலாளி ஒருவர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதில் அளிக்கும் ஊழியர் ஒருவர் "ஹே" என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டு இல்லை என பதில் அளித்துள்ளார்.
இந்த பதிலுக்கு அதிருப்தி அடைந்த முதலாளி, "வணக்கம் ஸ்ரேயாஸ், என் பெயர் சந்தீப். தயவுசெய்து 'ஹே' என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். இது எனக்குப் புண்படுத்துவதாக உள்ளது. எனது பெயர் உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், 'ஹாய்' என்று பயன்படுத்தவும்" என தெரிவிக்கிறார்.
பின்னர் ஊழியர் பதிவிடுகையில், "நாம் வாட்ஸ்அப் மூலம் உரையாடுகிறோம், லிங்க்ட்இன் அல்லது மெயில் செயின் மூலம் அல்ல. நீங்கள் எனது தனிப்பட்ட எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதால் நான் சாதாரணமாக பேசுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதற்கு மீண்டும் முதலாளி அனுப்பிய குறுஞ்செய்தியில், "நான் என் தத்துவத்தை உங்கள் மீது திணிக்கவில்லை. நீங்கள் அதைப் புரிந்து கொண்டால், சிறந்தது. இல்லை என்றால், நீங்கள் விரைவில் புரிந்துகொள்வீர்கள்." என தெரிவித்துள்ளார்.
இவர்களின் இந்த உரையாடல் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.