எல்லையில் நிலவும் சூழல் இந்தியா-சீனா இடையேயான நம்பிக்கையை அழித்து விட்டது: அஜித் தோவல் வருத்தம்
|எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் சூழல் இந்தியா மற்றும் சீனா இடையேயான மூலோபாய நம்பிக்கையை அழித்து விட்டது என சீன தூதரிடம் அஜித் தோவல் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
ஜோகன்னெஸ்பர்க்,
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் நாடுகளின் 15-வது உச்சி மாநாடு வருகிற ஆகஸ்டில் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட உள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா உறுதிப்படுத்தியதுடன், அதற்காக தயாராகி வருகிறார்.
கொரோனா பெருந்தொற்று நெருக்கடி மற்றும் அதனை தொடர்ந்து சர்வதேச கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு பின்னர் முதன்முறையாக நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்க கூடிய முதல் உச்சி மாநாடாக இது அமையும்.
எனினும், இந்த உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கமாட்டார். அவருக்கு பதிலாக ரஷிய கூட்டமைப்பு சார்பில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் பங்கேற்பார் என அந்நாட்டு அதிபரின் செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்நிலையில், சமீபத்தில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், பிரிக்ஸ் நாடுகளுக்கான வெளியுறவு மந்திரிகளின் காணொலி கூட்டத்தில் பங்கேற்றார். இதில், பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் கொள்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான மற்றும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கான கூட்டத்திற்கு தயாராவதற்கான பயனுள்ள உரையாடல் நடந்தது.
இந்த நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றில், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னெஸ்பர்க் நகரில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனாவின் தூதர் வாங் யியை சந்தித்து பேசினார்.
அவர் பேசும்போது, 2020-ம் ஆண்டில் இருந்து, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் சூழல் இந்தியா மற்றும் சீனா இடையேயான மூலோபாய நம்பிக்கை மற்றும் பொதுமக்கள் மற்றும் அரசியல் அடிப்படையிலான உறவை அழித்து விட்டது என எடுத்து கூறினார்.
இந்த விவகாரம் பற்றி முழுவதும் பேசுவது மற்றும் எல்லை பகுதிகளில் மீண்டும் அமைதியை நிலைநிறுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது ஆகியவற்றின் அவசியம் பற்றி வலியுறுத்தினார்.
இந்தியா மற்றும் சீனாவின் இருதரப்பு உறவானது இரு நாடுகள் மட்டுமின்றி பிராந்திய மற்றும் உலக நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறினார் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.