பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை பகிர்ந்த எல்லை பாதுகாப்பு படை பணியாளர் கைது
|குஜராத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை பகிர்ந்த எல்லை பாதுகாப்பு படை பணியாளரை பயங்கரவாத ஒழிப்பு படை கைது செய்து உள்ளது.
காந்திநகர்,
குஜராத்தில் உள்ள பயங்கரவாத ஒழிப்பு படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்து உள்ளது. இதன்படி, பூஜ் நகரில் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் பணியாற்றி வரும் நிலேஷ் வல்ஜிபாய் பலியா என்பவர் தேச பாதுகாப்புடன் தொடர்புடைய ரகசிய தகவல்களை பதுக்கி வைத்திருக்கிறார் என தெரிய வந்து உள்ளது.
அந்த தகவல்கள் அடங்கிய விவரங்களை அவர் தகவல் செயலி வழியே பாகிஸ்தான் நாட்டுக்கு அனுப்பி உள்ளார். இதனை தொடர்ந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில், கடந்த 5 ஆண்டுகளாக அவர், எல்லை பாதுகாப்பு படையின் மத்திய பொது பணி துறையில் உள்ள மின்சார துறையில் பியூனாக வேலை செய்து வந்து உள்ளார் என தெரிய வந்தது.
இதுபற்றி குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படையின் எஸ்.பி. சுனில் ஜோஷி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அதிதி திவாரி என்ற பெண் ஏஜண்டுடன் நிலேஷ் தொடர்பில் இருந்து உள்ளார். நட்பாகவும் பழகி வந்து உள்ளார்.
வாட்ஸ்அப் வழியே நடப்பு ஆண்டு ஜனவரியில் இருந்து அவர், தொடர்பில் இருந்ததுடன், அந்த பெண் ஏஜண்டிடம் எல்லை பாதுகாப்பு படையில் கணினி பிரிவில் பணியாளராக உள்ளேன் என கூறியுள்ளார்.
பணத்திற்காக அந்த பெண்ணிடம் ரகசிய தகவல்களை பகிர்ந்த விவரங்களையும் ஒப்பு கொண்டு உள்ளார். பூஜ் பகுதியில் நடந்து வரும் புதிய கட்டுமான பணிகள் பற்றிய விவரங்களை அவர் பகிர்ந்து கொண்ட தகவல்களை ஒப்பு கொண்டு உள்ளார். இதற்காக கடந்த ஜனவரியில் இருந்து ஜூன் 28-ந்தேதி வரை அவர் விவரங்களை பகிர்ந்து வந்து உள்ளார்.
இதற்கு பதிலாக அந்த பெண் ஏஜண்டிடம் இருந்து, நிலேஷ் வங்கி கணக்கிற்கு ரூ.28 ஆயிரத்து 800 பணபரிமாற்றம் நடந்து உள்ளது என அதிகாரி கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.