< Back
தேசிய செய்திகள்
கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை எழுந்து இருப்பது பா.ஜனதாவின் சதி; டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டு
தேசிய செய்திகள்

கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை எழுந்து இருப்பது பா.ஜனதாவின் சதி; டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டு

தினத்தந்தி
|
26 Nov 2022 12:15 AM IST

கர்நாடகம்-மராட்டியம் இடையே தற்போது எல்லை பிரச்சினை எழுந்திருப்பது பா.ஜனதாவின் சதி என்று டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியல்

வாக்காளர் தகவல் திருட்டு, தகவல் விற்பனை மற்றும் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்த துணை கமிஷனரை நியமனம் செய்துள்ளனர். உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

பூத் மட்டத்தில் கட்சியை பலப்படுத்தவும், அங்கு மக்களிடையே பிரசாரசம் செய்யவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த அரசு சிறுபான்மையினர், தலித், பழங்குடியின மக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகிறது. இதுகுறித்து மக்களிடையே நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

எல்லை பிரச்சினை

தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து உள்ளவர்கள் அனைவரும் தங்களின் தொகுதிகளுக்கு சென்று கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளோம். கர்நாடகம்-மராட்டியம் எல்லை பிரச்சினை என்பது பா.ஜனதாவின் 'மேட்ச் பிக்சிங்' ஆகும். மராட்டியம், கர்நாடகத்தில் பா.ஜனதா அரசுகள் தான் உள்ளன.

அம்மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவீஸ், பெலகாவி மட்டுமின்றி கார்வாரையும் பறிப்பதாக சொல்கிறார். இவை எல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி ஆகும். ஒரு அடி நிலத்தை கூட நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம். கர்நாடகத்தில் வசிக்கும் மராட்டியர்கள் நமது மாநிலத்தவர்கள் தான். அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நமது அரசுகள் இதை செய்து கொண்டு வருகிறது. தற்போது அரசியல் உள்நோக்கத்துடன் பா.ஜனதாவினர் இந்த எல்லை பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்