அக்னிவீரர்களுக்கான முன்பதிவு ஜூன் 24ல் தொடக்கம்: இந்திய விமான படை அறிவிப்பு
|அக்னிவீரர்களுக்கான முன்பதிவு ஜூன் 24ல் தொடங்கும் என இந்திய விமான படை அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,
அக்னிவீரர்களுக்கான முன்பதிவு ஜூன் 24ல் தொடங்கும் என இந்திய விமான படை அறிவித்து உள்ளது.
ராணுவம் உள்ளிட்ட படைகளில் இந்திய இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். அதன்பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படாது. இதனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டத்தின்போது, பீகார், உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதில், 3 ரெயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
பீகாரில் துணை முதல்-மந்திரி மற்றும் பீகார் பா.ஜ.க. தலைவர் உள்ளிட்டோரின் வீடுகள் தாக்கப்பட்டன. அக்னிபத் திட்டத்தில் ஆள்சேர்ப்பு பற்றி பாதுகாப்பு அமைச்சகம் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியது.
இதில் கடற்படை துணை தளபதி தினேஷ் திரிபாதி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, இந்த ஆண்டு நவம்பர் 21ந்தேதியில் இருந்து கடற்படையின் முதல் அக்னிவீரர்கள் குழுவானது, ஒடிசாவில் உள்ள ஐ.என்.எஸ். சில்காவில் பயிற்சிகளை தொடங்குவார்கள் என கூறியுள்ளார்.
இதற்காக ஆண் மற்றும் பெண் அக்னிவீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்தியாவின் பல்வேறு கடற்படை கப்பல்களில் 30 பெண் அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருகின்றனர். அக்னிபத் திட்டத்தின் கீழ் பெண்களையும் பணியில் அமர்த்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவர்கள் போர் கப்பல்களிலும் பணியமர்த்தப்படுவார்கள் என திரிபாதி கூறியுள்ளார்.
இதில், விமான படை தளபதி எஸ்.கே. ஜா பேசும்போது, அக்னிவீரர்களுக்கான முன்பதிவு ஜூன் 24ல் தொடங்கும். அவர்களுக்கான முதல்கட்ட ஆன்லைன் வழி தேர்வு ஜூலை 24ந்தேதி தொடங்கும் என கூறியுள்ளார்.
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அடங்கிய முதல் குழுவானது டிசம்பரில் படையில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கான பயிற்சி டிசம்பர் 30ந்தேதி தொடங்கும் என கூறியுள்ளார்.
ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் புரி கூறும்போது, ராணுவத்தில் சேர விரும்பும் ஆர்வமுள்ள 46 ஆயிரம் பேரை படையில் சேர்க்கும் பணிகளை அரசு தொடங்கும்.
அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இருக்கும். இந்த எண்ணிக்கை 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையும் அடுத்தடுத்து உயரும் என கூறியுள்ளார்.